ஆன்மீக அறிவியல்

ஆன்மீக அறிவியல்

[button link=”The URL of the button” variation=”red”]பிரபஞ்சம் உங்களை ஆழமாக ரசிக்கிறது![/button]

(பரமஹம்ஸரின் ஜீவன் முக்தி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.)

உங்களின் தங்கை வீட்டிற்கு, உங்களின் தங்க மகளை விடுமுறைக்காக அனுப்பி வைத்துவிட்டு, எப்படி மகளின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பீர்களோ, அப்படி உங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்து இறைசக்தி ஆவலோடு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ இருக்கும் பிள்ளையின் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்…

நீங்கள் ஓடோடி வந்துவிடுவீர்கள்.

ஆனால், அது தெரியாமல், அத்தை வீட்டில் விளையாட ஆரம்பித்த குழந்தை தன்னையே சில நாட்களுக்கு மறந்துவிடும்! பூமியில் மனிதன் வாழ்வதும் இதே விருந்தாளி விளையாட்டுத்தான்.

புது உறவு… புது இடம்… புது கூத்து… ஒரு சண்டையோ, சங்கடமோ அங்குவராத வரை எல்லாமே நன்றாகவே போகும். ஒரு சச்சரவு போதும், புதிதெல்லாம் புளித்துப்போகும்; களிப்பெல்லாம் சலிப்பாகிப் போகும்.

அப்போதுதான் நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த இடம் நோக்கி, வந்த மூலம்நோக்கி, நினைவு நமக்குத் திரும்பும்.

பேசாம அம்மாகிட்டேயே போயிடலாம்…

இவங்க யாருமே நம்மைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்..”. என்ற ஏக்கம் வெடிக்க, அம்மாவுக்குத் தொலைபேசி போட்டால், அடுத்த பேருந்திலேயே அப்பா அங்கே வந்து நின்றுவிடுவார்.!

நீங்கள் எப்படியிருந்தாலும் உங்களின் அழகை அப்படியே ரசிக்கும் உங்களின் அன்னை இறைசக்தி.

கண், காது, மூக்கு, நாக்கு என்ற எதுவுமே உருவாகும் முன்பு, அவளின் மடியில்தான் உறங்கிக்கொண்டிருந்தீர்கள்.

இங்குச் சிலகால விடுமுறையாக மட்டுமே வந்திருக்கின்றீர்கள். எங்குப் பிறந்திருந்தாலும், எப்படி வளர்ந்திருந்தாலும், நாம் அனைவரும் அவளுக்கு, அந்த இறைசக்திக்குச் சொந்தமானவர்கள்தான்.

பூலோக வாழ்வு எனும் 100 வருட விடுமுறை எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிடும்.

முடிந்த பின்பு, வந்த இடம் நோக்கித்தான் செல்வீர்கள். அங்கே நீங்கள் ஒரு இந்து அல்ல; நீங்கள் ஒரு முகமதியர் அல்ல; நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. படித்தவரோ படிக்காதவரோ, அல்ல.

நீங்கள் அங்கு ஒரு மனிதர் கூட அல்ல. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றால், அங்கு உங்களுக்கு உடல்கூட கிடையாது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு நீங்களே கிடையாது. இப்போது ‘நீங்கள்’ என்று உங்களைச் சொல்லும் எதுவுமே அங்கு கிடையாது.

இப்போது,

இந்த நிமிடம்…

கண்களை மூடினால்…

உள்ளே என்ன தெரிகின்றதென்று பாருங்கள்.

இதுதான் உங்களுக்குத் தெரிந்த நீங்கள்.

இதைவிட சூட்சுமமான நிலையில்தான் அப்போது இருப்பீர்கள். அப்போதும் அந்த இறைசக்தி உங்களை அன்போடு கொஞ்சவே செய்யும். எதையுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்காமல், ஜீவன் முக்தியை நீங்கள் அடைய வேண்டும் என்ற அவளின் ஹிரண்ய கர்ப்பத் துடிப்பால், உங்களைப் பூமியில், உங்களின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு உங்களை பிரசவிப்பாள். பூமிக்கு, புது அனுபவத்திற்காக விடுமுறைக்காக அனுப்பி வைப்பாள்.

ஒருவேளை! வந்த இடம் உங்களுக்கு ஒத்துவராவிட்டாலும் சரி, இதற்குமேல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்ற வெறுமை தோன்றினாலும் சரி, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொலைபேசியை எடுத்தால் போதும்.

தொலைவில் இருப்பதாய் நீங்கள் நினைக்கும் இறைசக்தி,

போதுமப்பா! என்னைக் காப்பாற்று! என்னை மேலேற்று!”

என்று ஒரே ஒரு முறை உங்களுக்குள் டயல் செய்தால் போதும்.

உங்களின் உணர்வுபேசி,

தொலைபேசியை விட துரிதமானது.

உங்களின் இறைத்தாயை ஒரே ஒரு முறை அழைத்தால் போதும், அடுத்த பேருந்தில் அல்ல, அடுத்த யோசனை காலத்திற்குள், உங்களின் தந்தை அங்கு வந்து சேர்ந்து விடுவார். ஏதோ ஒரு உருவில், வடிவில், தாளில், எப்படியோ அவர் வந்து சேர்ந்துவிடுவார்.

உங்களின் தாய்தான் உங்களுக்குள்ளேயே வாழும் இறைசக்தி,

உங்களின் தந்தைதான் உங்களுக்காகவே பிறந்திருக்கும், ஜீவன் முக்த புதல்வர்களுக்காகவே ஒவ்வொரு காலத்திலும் பிறப்பெடுக்கும் உங்களின் சத்குருநாதர்.

தந்தையை நீங்களே தேடலாம்.

அல்லது தாயிடம் வேண்டிய மாத்திரத்தில், தந்தையை உங்களின் வாழ்வில் தோன்றச் செய்யலாம். எளிதில் சந்திக்கலாம்.

எது எப்படியோ?… இது புது இடம்.

வெகு சீக்கிரத்தில் காலி செய்யப்பட வேண்டிய இடம் இது!

வந்த வேலை, எந்த வேலையோ, அந்த வேலையை விட்டுவிட்டு எந்தெந்த வேலைகளிலெல்லாமோ காலத்தைக் கழிப்பது எந்த வகையிலும் பிரயோஜனத்தைத் தருமா?

எந்த வேலையில் நீங்கள் இருந்தாலும், வந்த வேலையில் கருத்தாயிருக்க வேண்டும்.

ஆரியக் கூத்தாடினாலும், வந்த காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

வந்த வேலை

ஜீவன் முக்தி எனும்

காரியக் கூத்தாடுவதற்கு.

வந்த வேலை

கடவுளாவதற்கு.

மனிதன் எனும் மாயத்திலிருப்பதற்கல்ல.

‘நீங்கள் கடவுள்’

என்பதற்குக் குறையாக

எந்த உணர்வு எழுந்தாலும், அது நீங்களல்ல,

‘நான் கடவுள்’

என்பதற்குக் குறையாக

உங்களைப் பற்றிய எந்தவொரு எண்ணமும்

மாயமே! தாண்டப்பட வேண்டியதே!

 

ஜீவன் முக்தராவதற்குத்

தயாராகுங்கள். நிச்சயம் தாண்டலாம்.

உருகுங்கள், நிச்சயம் தாண்ட வைப்பார்.

வாழுங்கள்! ஜீவன் முக்தியை.

நீங்கள் தொடும் முன்பே ஜீவன் முக்தி உங்களைத் தொட்டுவிடும்.

ஆனந்தமாக இருங்கள்!

பரமஹம்ஸ நித்யானந்தர்

admin

One thought on “ஆன்மீக அறிவியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *